Saturday, April 02, 2011

பாரம்பரிய நாட்டுப்புறக் கலை வடிவங்களின் கொண்டாட்டம் :யாழ்ப்பாணம் இசை விழா


யாழ்ப்பாணம் இசை விழாவிற்காக அமைக்கப்பட்ட அலங்காரம்


யாழ்ப்பாணப் பாரம்பரிய வரவேற்ப்பு

யாழ்ப்பாணத்திலிருந்து துஷியந்தினி கனகசபாபதிப்பிள்ளை

பல தசாப்தங்களின் பின்னர் யாழ்ப்பாணம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டது. யாழ்ப்பாண இசை விழா கடந்த மார்ச் மாதம் 25 ஆம், 26 ஆம், 27 ஆம் திகதிகளில் யாழ் மாநகர சபை மைதானத்தில் வெகு விமரிசையாக நடந்தது. இது சரித்திர பூர்வமான மண்ணில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

இவ் விழாவில் பல தரப்பட்ட பாரம்பரிய இசை, நடன நிகழ்வுகள் இலங்கையில் உள்ள பல பாகங்களிளிருந்தும் பல்லின மக்களினாலும் வழங்கப்பட்டன. உள்ளூர் கலைஞர்களுடன் இந்தியா, தென் ஆபிரிக்கா, நேபாளம், பாலஸ்தீனம், நோர்வே ஆகிய சர்வதேச நாடுகளில் இருந்தும் வந்த கலைஞர்களின் இசை மற்றும் நடனம் கிராமிய வடிவங்களில் அழகாக வழங்கப்பட்டன. கிராமியச் சூழமைவோடு இடம்பெற்ற இவ் விழாவில், உள்நாட்டு சர்வதேசக் கலைஞர்கள் காலை முதல் நள்ளிரவு வரை இந் நிகழ்வுகளை நடத்தினர்.பல ஆண்டுகளின் பின்னர் கலை நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெற்றன.


கொக்குவிலைச் (கட்டுவன்) சேர்ந்த வசந்தன் கூத்து

இவ் விழாவானது பார்வையாளருக்குக் கிராமியப் பாரம்பரிய அறிவைத் தருவதோடு வேறுபட்ட கிராமியக் கலை வடிவங்களின் கலை நுட்பத்தை செயன்முறை விளக்கம் மூலம் அறியக் கூடிய வகையிலும் அமைக்க்கப்பட்டிருந்த்தது.இவ் இசை விழாவானது 2009 ஆம் ஆண்டு காலியில் நடைபெற்ற இசை விழாவின் தொடர் நிகழ்வாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை யாழ் மண்ணில் மலரும் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

"நான் 16 வயதிலிருந்தே கரகம் ஆடி வருகின்றேன் . 78 வயதிலும் கூட என்னால் கரகம் ஆட முடிகின்றது. யாழ்ப்பாண இசை விழாவில் கலந்து கொண்டமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது. பாரம்பரிய நாட்டுப்புறக் கலையை அழிய விடாமல் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்" என முள்ளியவளையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞரான ராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை தெரிவித்தார்.


யாழ்ப்பாண இசை விழாவில் கரகம் ஆடும் முள்ளியவளையைச் சேர்ந்த கரகாட்டக் கலைஞரான ராமுப்பிள்ளை முருகுப்பிள்ளை

சுழிபுரத்தைச் சேர்ந்த பப்ரவாஹம் குழுவினர் ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பின்னர் பப்ரவாஹம் கூத்தை மீண்டும் மேடையேற்றினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதே போன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த கோவலன் கூத்து மற்றும் மகுடி ஆட்டம் என்பன பல தசாப்தங்களின் பின்னர் யாழ் மண்ணில் மேடையேறியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

"யாழ்ப்பாணம் வந்து சக தமிழ் கலைஞகர்ளுடனும் பழகியமையும், இங்கு கலை நிகழ்ச்சிகளை நடத்தியமையும் மகிழ்ச்சியளிக்கின்றது .இது எனது முதலாவது அனுபவம். யாழ்ப்பாணத்தை விட்டுச் செல்லும் போது கவலையுண்டாகின்றது.இதே போன்று தமிழ் கலைஞர்கள் சிங்களப் பகுதிகளுக்குச் சென்று தமிழ் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை ஏனைய கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்" எனத் தெல்தெனியவைச் சேர்ந்த சிங்கள நாட்டுப்புறக் கலைஞரான நிஷாந்த ரம்பிட்டிய கூறினார்.

கிடுகுகளினால் கொட்டில்கள் அமைக்கப்பட்டுப் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைஞர்கள் அக் கொட்டில்களிலேயே மூன்று நாட்களும் தங்கியிருந்தனர். ஒவ்வொரு குழுவினரும் தத்தமது பாரம்பரியக் கலைகளுக்கு ஏற்ற முறையில் தமது கொட்டில்களை மிகவும் அழகான முறையில் அலங்கரித்திருந்தனர். யாழ்ப்பாண முறைப்படி, யாழ் இசை விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சம்பிரதாயபூர்வமாக வாழை இலையில் சைவ உணவு பரிமாறப்பட்டது பாராட்டிற்குரியது.

கொழும்பிலிருந்து பல நாட்டுப்புறக் கலை ரசிகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான பாரம்பரிய நாட்டுப்புறக் கலையை ரசிப்பவர்கள் இரவு பகலாகப் பல தசாப்தங்களின் பின்னர் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர்.இந்த இசை நிகழ்வில் வெளிநாட்டு இசைக் குழுக்கள் உட்பட 28 இசைக் குழுக்கள் பங்குகொண்டன.சுமார் 15,000 பேர் நிகழ்வுகளைக் கண்டுகளித்ததாக விழா அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

தம்மை மறந்து இசையை ஆழ்ந்து ரசிக்கும் சிறுவர்கள்


பாலஸ்தீனக் கலைஞரிடம் கற்கும் சிங்களக் கலைஞர்


யாழ் மண்ணில் இசைப்ப்ரவாகம்


அக்கரைப்பற்றைச் சேர்ந்த களி கம்பாட்டம்


சிறுவர்களின் வில்லுப்பாட்டுஇந்தியாவைச் சேர்ந்த மங்கநியார் குழுவினர்


முள்ளியவளையைச் சேர்ந்த கோவலன் கூத்து


சிராம்பியடியைச் சேர்ந்த கபீர் மஞ்சா


சபரகமுவாவைச் சேர்ந்த பாலி நடனம்


நாகர் கோவிலைச் சேர்ந்த கப்பற் பாட்டு


யாழ்ப்பாணம் இசை விழா நடைபெற்ற பகுதியின் தோற்றம்


மட்டக்களப்பைச் சேர்ந்த ராவணேசன்


வவுனியாவைச் சேர்ந்த உழவர் நடனம்


நள்ளிரவு வேளையில் நிகழ்ச்சிகளைக் கண்டு கழிக்கும் ரசிகர்கள்


நோர்வூட்டைச் சேர்ந்த காமன் கூத்து


அம்பலாங்கொடையைச் சேர்ந்த பொம்மலாட்டம்


~~ இக் கட்டுரை ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் (03.04.0211)முதற் தடவையாகப் பிரசுரிக்கப்பட்டது ~~

0 Comments:

Post a Comment

<< Home