தினக்குரல் பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்; முகத்துவாரம் பொலிசில் முறைப்பாடு
ஊழியர்களுக்கான அறிவித்தல் ~ 13.09.2011
ஊழியர்களுக்கான அறிவித்தல் ~ 12.09.2011
தினக்குரல் ஆசிரிய பீடத்தின் 25 பத்திரிகையாளர்கள் இன்று புதன்கிழமை காரியாலயத்தினுள் நுழைய அனுமதிக்கப்படாமல் ஏஷியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் நிர்வாகத்தினால் வீதியில் நிறுத்தப்பட்டதையடுத்து சட்டவிரோதமாகத் தாங்கள் வேலையில் இருந்து தடுக்கப்பட்டிருப்பதாகக் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் புகார் செயதிருக்கிறார்கள் .
நிர்வாகத்தின் வற்புறுத்தலுக்கு அடிபணிய மறுத்து இதுவரை ராஜினாமாக் கடிதங்களைக் கொடுக்காத தினக்குரல் 25 பத்திரிகையாளர்களே இவ்வாறு இன்று வீதியில் நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதேசமயம், தினக்குரல் ஊழியர்கள் கொழும்பு தொழில் திணைக்களத்தில் தம் மீதான ராஜினாமா வற்புறுத்தல் குறித்தும் வேலைக்கு அனுமதிக்கப்படாமை குறித்தும் முறைப்பாடு செய்துள்ளார்கள். இதனையடுத்து இது விடயத்தில் விளக்கமளிக்க வருமாறு தொழில் திணைக்களத்தின் உதவிப் ஆணையாளர் விக்கிரமசிங்க ஏஷியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் பணிப்பாளர் பி . கேசவராஜாவை அழைத்த போதிலும் இன்று தனக்கு நேரம் இல்லை என்று மறுத்து விட்டார். இதனையடுத்து நாளைய தினம் இந்த சந்திப்பும் பிணக்கு தீர்க்கும் கூட்டமும் நடைபெறவிருக்கிறது.
தினக்குரல் பப்ளிகேஷன் நிறுவனத்தை வாங்கிய வீரகேசரி நிறுவனம் (ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் நிறுவனம்) தினக்குரல் பத்திரிகையை ஜூன் 30ஆம் திகதியிலிருந்து நடத்தி வருகிறது. வெளியேற்றப்பட்ட 25 பத்திரிகையாளர்களும் கடந்த 2 மாதங்கள் 13 நாட்கள் ஏஷியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்திற்காகப் பணியாற்றியிருக்கிறார்கள். ஏஷியன் மீடியா பப்ளிகேசன்ஸ் பிரைவேட் நிறுவனத்திலிருந்தே அவர்களுக்குச் சம்பளமும் வழங்கப்பட்டிருக்கிறது.
ஆனால், தினக்குரல் நிறுவனத்திலிருந்து விலகுவதாக ராஜினாமாக் கடிதங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே, ஏஷியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்தினால் நியமனக் கடிதம் வழங்கப்படும் என்ற நிபந்தனையை வீரகேசரி நிறுவனம் விதித்திருக்கிறது. தினக்குரலைச் சிறிது காலத்தில் மூடுகின்ற சந்தர்ப்பத்தில் தினக்குரல் ஊழியர்களுக்குப் பெரும் தொகை நஷ்ட ஈடு வழங்க வேண்டி இருக்கும் என்பதாலேயே முன் எச்சரிக்கையாக அவர்களிடம் இருந்து ராஜினாமாக் கடிதங்களைப் பெறுவதில் நிர்வாகம் உறுதியாக இருந்து வந்தது. ராஜினாமாக் கடிதங்களைச் சமர்ப்பிப்பதற்கு இன்று புதன்கிழமை வரை காலக்கெடு விதித்திதிருந்த ஏஷியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் நிறுவனம் 25 பத்திரிகையாளர்களும் ராஜினாமாக் கடிதங்களைச் சமர்ப்பிக்காததால் அவர்களைக் காரியாலயத்தினுள் நுழைய அனுமதிக்கவில்லை. அத்துடன் செய்தி ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான பதவி வெற்றிட விண்ணப்ப அறிவித்தல்களை ஏஷியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
0 Comments:
Post a Comment
<< Home