Saturday, April 09, 2011

தமிழ் ஊடகத்துறையும் சுயாதீனச் செய்தியாளர்களும்



டகத் துறையானது ஏனைய துறைகளை விடப் புனிதமானது. கடினமானதும் கூட! இத் துறைத் தொழிலாகத் தேர்ந்தெடுப்பவர்கள் சிலர்; அதிலும் இத் துறையில் தொடர்ந்து நிற்பவர்கள் ஒரு சிலரே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!

மேலும் பலர் ஊடகத் துறையைப் பகுதிநேரத் தொழிலாகவோ அல்லது சுயாதீன ஊடகவியலார்களாகவோ பணியாற்றி வருகின்றனர். இந்தியா உட்பட ஏனைய பல நாடுகளில் இவ்வாறான சுயாதீன ஊடகவியலாளர்கள் முழுநேர ஊடகவியலாளர்களைப் போன்றே கவனிக்கப்படுகின்றனர் என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டியதொன்று.



ஆனால் இலங்கையில் சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான தொழில்சார் வசதிகளோ அல்லது செய்தி சேகரிப்பிற்காகக் குறிப்பிடட் இடங்களுக்குப் பிரயாணம் செய்வதற்கான அனுமதியோ அல்லது அவர்களுக்கான தொழில்சார் அங்கீகாரத்தை வழங்குவதோ இல்லையென்று கூறினால் அது மிகையாகாது!

"நீங்கள் சுயாதீன ஊடகவியலாளர்கள் தானே?? எனப் பலர் சக சுயாதீன ஊடகவியலாளர்களைப் பார்த்துத் தரக் குறைவாகக் கேட்கும் சந்தர்ப்பங்களைப் பார்த்துள்ளேன்; கேட்டுள்ளேன். இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த நிலை உடனடியாக மாற வேண்டியது அவசியம்.

இலங்கையைப் பொறுத்த வரையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் அவர்கள் தொழில் புரியும் பத்திரிகை, இலத்திரனியல் மற்றும் இணையத் தளங்கள் ஆகிய அலுவலகங்களின் மூலம் கிடைக்கும் தொழில்சார் ஆதரவு மிகக்க குறைவு என்றே கூற வேண்டும். ஆனால் ஏனைய நாடுகளில் சுயாதீன ஊடகவியலாளர்களுக்குத் தத்தமது அலுவலகங்களின் மூலம் கிடைக்கும் தொழில்சார் ஆதரவு அளப்பரியது. இதன் காரணமாகப் பலர் சுயாதீன ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவதற்கு முன்வருகின்றனர். இது பாராட்டத்தக்கதொரு முயற்சியாகும்.

மேலும் “ட்விட்டர்” ~ இரு வழிச் செய்தித் திரட்டு, “ப்ளிக்கர்” ~ புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை இலகுவாக இணையத்தில் பதிவதற்கான புதிய அல்லது சமூக ஊடக உத்திகளையும் ஊடகவியலாளர்கள் பரந்த அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு அண்மையில் டுனிசியா, பஹ்ரைன், எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் போது ஊடகவியலாளர்கள் இவ்வாறான புதிய அல்லது சமூக ஊடக உத்திகளைப் பரந்த அளவில் பயன்படுத்தி செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதையும் உடனடிச் செய்தியை வழங்கியதையும் காணக் கூடியதாகவிருந்தது. சர்வதேச ஊடக மட்டத்தில் நாளாந்தம் பல ஊடகவியலாளர்கள் இவ்வாறான புதிய அல்லது சமூக ஊடக உத்திகளைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கி வருகின்றனர்.


அத்துடன் இலங்கையில் ஆங்கிலப் பத்திரிகைகளில் பலர் சுயாதீன ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுவதைக் காணலாம். ஆனால் தமிழ் ஊடகத்த் துறையைப் பொறுத்த வரையில் சுயாதீன ஊடகவியலாளர்களாகப் பணியாற்றுபவர்கள் ஒப்பீட்டளவில் குறைவு என்றே கூற வேண்டும். இதற்குத் தேவையான ஆதரவு ஆசிரியபீடத்திலிருந்து கிடைத்தாலும், சுயாதீன ஊடகவியலாளர்களுக்கான தொழில்சார் ஆதரவை வழங்குவதற்கு முகாமைத்துவம் மறுக்கின்றது; முன்வருவதில்லை. இந்த நிலையை மாற்றிச் சுயாதீன ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் ஆரோக்கியமான நிலை தமிழ் ஊடகத் துறையில் தோன்ற வேண்டியது அத்தியாவசியமானது! அத்துடன் முழுநேர ஊடகவியலாளர்களுக்கும் பகுதிநேர ஊடகவியலாளர்களுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுவதும் விரும்பத்தக்கது.





~~ இக் கட்டுரை தினக்குரல் பத்திரிகையின் 15 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் வெளிவந்த விசேட "சுவடு" சஞ்சிகையில் முதற் தடவையாகப் பிரசுரிக்கப்பட்டது ~~

0 Comments:

Post a Comment

<< Home